தமிழ்நாடு

டேங்கர் லாரியை ஓட்டியபோது திடீர் நெஞ்சுவலியால் ஓட்டுநர் பலி - இறப்புக்கு முன் செய்த செயல்!

டேங்கர் லாரியை ஓட்டியபோது திடீர் நெஞ்சுவலியால் ஓட்டுநர் பலி - இறப்புக்கு முன் செய்த செயல்!

PT

ஆத்தூர் அருகே டேங்கர் லாரியை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், இறப்பதற்கு முன்னர் லாரியை சாலையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தியால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தனியார் பால் நிறுவனத்தில் இருந்து டாரஸ் டேங்கர் லாரி மூலம் பால் ஏற்றி கொண்டு வத்தலகுண்டுக்கு செல்வதற்காக ஆத்தூர் வழியாக ராசிபுரம் சாலையில் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த ஓட்டுநர் கதிரவன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கதிரவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தில்லைநகர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் லாரியை நிறுத்தி விட்டு இருக்கையிலே மயங்கி விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர் ஓட்டுநர் கதிரவனுக்கு முதலுதவி அளித்தும் பலனளிக்காததால் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஓட்டுநர் கதிரவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே ஓட்டுநர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் ஓட்டுநர் கதிரவனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டேங்கர் லாரியை சாலையில் ஓட்டிச்சென்றபோது ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டும் லாரியை லாவகமாக சாலையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தியால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடதக்கது.