’சமவேலைக்கு சம ஊதியம்’ கோரி கடந்த 7 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டம் நடத்திவந்தனர். அதேபோல், டெட் ஆசிரியர்கள் தங்களுக்கு முழுநேர ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்றுகோரியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித்தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கோரியும் போராட்டம் நடத்தினர்.
இவர்களின் போராட்டம் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேற்று (அக்.4) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். ஆசிரியர்களின் கோரிக்கைகளைப் பரிந்துரைக்க குழு அமைக்கப்பட்டிருப்பதால், அரசு மீது நம்பிக்கை அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை போலீசார் இன்று கைதுசெய்துள்ளனர். அவர்கள் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், டெட் ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள், ”தற்போது தற்காலிகமாகப் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். பின்னர் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் தீவிரமாக மீண்டும் போராட்டம் நடத்துவோம். சட்டசபை கூட்டத்தொடருக்குள் எங்களுக்கு நல்ல தீர்வு தர வேண்டும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், நாங்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் வேட்பாளராக நின்று தேர்தலில் களம் காணுவோம்” எனத் தெரிவித்துள்ளனர்.