தமிழ்நாடு

லாரிக்கு ரேஷன் அரிசி மூட்டையை முட்டுக் கொடுத்த விவகாரம்: ஊழியர்கள் பணிநீக்கம்

லாரிக்கு ரேஷன் அரிசி மூட்டையை முட்டுக் கொடுத்த விவகாரம்: ஊழியர்கள் பணிநீக்கம்

webteam

அரிசி மூட்டைகளை அலட்சியமாக கழிவுநீரில் போட்டுவிட்டு எடுத்துச்சென்ற கொடுமையான சம்பவம் ஒன்று நெல்லையில் நடந்துள்ளது. அதனை பற்றி புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருந்தன் எதிரொலியாக அதுதொடர்பான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 

பாளையங்கோட்டையில் இருந்து நெல்லையில் உள்ள கூட்டுறவு பேரங்காடிக்கு பொது விநியோகத்திற்காக அரிசி உள்ளிட்ட மூட்டைகளை லாரி ஒன்று எடுத்துச் சென்றது. அப்போது சாலையின் பெரிய பள்ளம் ஒன்றை லாரி கடக்க நேரிட்டது. அப்போது கொஞ்சமும் தயங்காமல் லாரியில் இருந்த அரிசி மூட்டையை கீழே இறக்கி கழிவுநீரும், மழைநீருமாக கலந்து ‌கிடந்த தண்ணீரில் போட்டனர். அந்த அரிசி மூட்டையின் மீது லாரி ஏறி பள்ளத்தை கடந்த நிலையில், கிழிந்துவிட்ட அரிசி மூட்டைக்குள் மீண்டும் அரிசியை அள்ளிப் போட்டுக்கொண்டு சென்றனர். அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் கூட்டுறவு அங்காடிப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த கேள்வியை எழுப்பியது.

இந்தச் செய்தி புதிய தலைமுறையில் வெளியானதையடுத்து, நடவடிக்கை எடுத்துள்ள பாளையங்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி, லாரி ஒப்பந்ததாரருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். மேலும் தற்காலிக பணியாளர் தங்கராஜ், லாரி லோடு மேன் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நகர்வு உதவியாளர் தங்கதுரை பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.