பாலச்சந்திரன் ட்விட்டர்
தமிழ்நாடு

நாளை வலுப்பெறும் ’மிக்ஜாம்’ புயல்! 70 கிமீ வேகத்தில் காற்று.. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னையில் நாளை மற்றும் அதற்கு அடுத்த நாளில் (டிச.3, 4) கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Prakash J

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 8:30 மணி அளவில் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு அருகே சுமார் 440 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கு 580 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தெற்கே தென்கிழக்கு 670 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

புயல்

இது தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுபெறக்கூடும். அதன்பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4ஆம் தேதி பிற்பகல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டியுள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலைகொள்ளும். அதன்பின்னர் வடக்குத் திசையில் நகர்ந்து நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 5ஆம் தேதி முற்பகலில் புயலாக கரையை கடக்கக்கூடும்” என தெரிவித்தார்.

இதையும் படிக்க: அதிரடியில் மிரட்டிய ரின்கு சிங்! அக்சர் சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா! டி20 தொடரை வென்றது இந்தியா!

மேலும் அவர், “வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில் அடுத்துவரும் 3 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் ஓரிடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

3ஆம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான வடகடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

கனமழை

அதேபோல, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 4ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 3ஆம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் தரைக்காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

இதையும் படிக்க: இரும்பு கழிவு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி - பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது

4ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடலூர் பகுதிகளில் பலத்த தரைக்காற்றானது 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மேலும், விழுப்புரம், புதுவை, கடலூர் மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக கடலோரப் பகுதியில் ஆந்திர கடற்கரை பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.

எனவே, மீனவர்கள் அப்பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 1 முதல் இன்று வரையுள்ள காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 34 செ.மீ இந்த காலகட்டத்தில் சராசரி அளவு 36 செ.மீ. இது இயல்பைவிட 7 சதவீதம் குறைவாகும். சென்னையைப் பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இன்றுவரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 62 செ.மீ. இந்த காலகட்டத்தில் சராசரி அளவு 67 செ.மீ ஆகும், இது இயல்பைவிட 7 சதவீதம் குறைவு’’ என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ’அடுத்த பெண்ணைப் பார்ப்பியா..’ - அமெரிக்காவில் காதலனின் கண்ணில் ஊசியால் குத்திய காதலி!