சட்டப்பேரவையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை நீக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தை, பிப்ரவரி 12ஆம் தேதி அன்று முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் பேரவை தலைவர் தனபால் திறந்துவைத்தார். இதனை எதிர்த்து திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சொத்துகுவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட ஒருவரின் படத்தை சட்டப்பேரவையில் திறந்துள்ளது சட்டவிரோதம் என குற்றம்சாட்டியிருந்தார். மேலும் விதிமுறைகளை மீறி அவசரமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் படத்தை அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சபநாயகரின் நிர்வாக அதிகாரத்தில் நீதிமன்ற தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்பழகன் தொடர்ந்த மனுவையும் தள்ளுபடி செய்தது.