தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: 7ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் | குத்துச்சண்டை - பூஜா ராணி தகுதி

விரைவுச் செய்திகள்: 7ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் | குத்துச்சண்டை - பூஜா ராணி தகுதி

Sinekadhara

7 ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்: பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் 7 ஆவது நாளாக முடங்கியது.

'உளவு பார்த்தீர்களா? இல்லையா?' - ராகுல் கேள்வி: பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என 14 எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை தொடர்ந்து மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அவைகளில் பொதுச்சொத்துகள் சேதம்-கண்டிப்பு: சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ பொதுச்சொத்துக்களை எம்பி,எம்எல்ஏக்கள் சேதப்படுத்துவது கருத்துச் சுதந்திரம் அல்ல என 2015ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் நடந்த அமளி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்திருக்கிறது.

சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது: விடுதலைப் போராட்ட வீரரும் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக சங்கரய்யா அறிவித்திருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு ரத்து: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சிறப்பு நீதிமன்றம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரிய போராட்டத்தில் வழக்குகளை வாபஸ் பெறுவதாக காவல்துறை கூறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அபராதத்தை நிவாரண நிதியாக வழங்க விருப்பமில்லை: சொகுசு கார் நுழைவு வரி அபராதத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்க விருப்பமில்லை என தனி நீதிபதியிடம் நடிகர் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சோனியா காந்தி - மம்தா பானர்ஜி சந்திப்பு: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு - வழக்கு ஒத்திவைப்பு: நீதிமன்றம் கேள்வி: வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படுகிறதா? என்று இன்று பிற்பகல் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை - மத்திய அரசு கடிதம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை தொடங்கலாம் என வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக தலைமைச்செயலருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதி இருக்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துக: பண்டிகைகள் வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துக என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

கிராமங்களில் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதா?: கிராமப்புறங்களில் ஆரம்பப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என மாணவர்களுக்கு சத்துணவு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தனியார் மருத்துவமனைகளில் தொழில் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின்கீழ் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை சென்னையில் தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திமுக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்: தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என கூறி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் கவனத்தை திசை திருப்ப முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறார்.

யாராலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது: யார் நினைத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என சசிகலா, டிடிவி தினகரன் தொடர்பான கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்திருக்கிறார்.

ஆகஸ்ட் 18 முதல் பொறியியல் கல்லூரி வகுப்புகள்: ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகளை ஆன்லைன் முறையில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருக்கிறது.

ஜனாதிபதி தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐந்து நாள் பயணமாக ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழகம் வருகிறார். சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

ரூ.600 கோடி மோசடி- மேலும் 2 பேர் கைது: கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 600 கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான கணேசனின் மனைவி, மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தன மரங்கள் கடத்தல் - தனிப்படை அமைப்பு: பெரம்பலூர் வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக புகார் எழுந்ததன்பேரில் ரேஞ்சர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்து வனத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் ராணுவம்: ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பால் திடீரென பெய்த கனமழை பெய்துவருகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும்பணியில் ராணுவம் தீவிரமாக இறங்கியிருக்கிறது.

வில்வித்தை - காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தீபிகா குமாரி: ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றார். தனிநபர் இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் மியூசினோவை 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

குத்துச்சண்டை - பூஜா ராணி காலிறுதிக்கு முன்னேற்றம்: ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிக்கு முன்னேறினார். 75 கிலோ எடைப்பிரிவில் அல்ஜீரிய வீராங்கனையை ஐந்துக்கு - பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்கடித்தார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி.சிந்து: ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து. லீக் சுற்றில் 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

ஆக.9 முதல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்பு: ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் கலை கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார்.