தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு | செங்கோட்டையை பார்வையிட தடை

விரைவுச் செய்திகள்: இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு | செங்கோட்டையை பார்வையிட தடை

Sinekadhara

இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. நாளை மறுநாள் முதல் 25ஆம் தேதி வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவித்திருக்கிறது.

மது கடத்தல் - கண்டுகொள்ளாத 6 போலீஸ் சஸ்பெண்ட்: திருவாரூர் மாவட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தியவர்களை விடுவித்த புகாரில் ஆய்வாளர் உட்பட 6 காவல்துறையினர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்த நடவடிக்கை: பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஆக்சிஜன் இன்றி யாரும் இறக்கவில்லை: தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்திருக்கிறார்.

மணல் கடத்தல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: நெல்லை மாவட்டம் அம்பை அருகே ஆற்று மணல் கடத்தப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது. பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் முறையான விசாரணை தேவை என நீதிதிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

5 பைசா பிரியாணிக்கு அலைமோதிய கூட்டம்: மதுரையில் 5 பைசா நாணயத்திற்கு பிரியாணி என அறிவிக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. கொரோனா தடுப்பு விதிகள் காற்றில் பறந்ததால் கடையை மூடி காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

படகில் சென்று ஆட்சியர் அதிரடி ஆய்வு: கடலூரில் மாவட்ட ஆட்சியர் திடீரென நடுக்கடலுக்கு சென்று ஆய்வு நடத்தினார். மீன்பிடி தொழில் சார்ந்த விதிமுறைகளை மீனவர்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என விசாரணை மேற்கொண்டார்.

3 ஆசிரியைகளிடம் சிபிசிஐடி விசாரணை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட வழக்கில் பள்ளி ஆசிரியைகள் மூவரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவாகரத்து வழக்கிற்காக வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: திருவள்ளூரில் விவாகரத்து வழக்கிற்காக வந்த பெண்ணுக்கு மயக்க மாத்திரை கொடுத்த ஆபாசமாக படம் எடுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். 7 லட்சம் ரூபாய் பணத்தையும் மிரட்டிப் பறித்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

செங்கோட்டையை பார்வையிடத் தடை: டெல்லி செங்கோட்டையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி ட்ரோன் தாக்குதல் நடத்தக்கப்படக்கூடும் என்ற எச்சரிக்கையை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மும்பையில் மீண்டும் மழைநீர் தேக்கம்: மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் மீண்டும் மழை கொட்டித் தீர்த்தது. செம்பூர் பகுதியில் நீர் தேங்கியதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

கொரோனா சிகிச்சை - ரூ.64,000 கோடி செலவிட்ட மக்கள்: நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக கடந்த 14 மாதங்களில் 64 ஆயிரம் கோடி ரூபாயை மக்கள் செலவிட்டிருக்கின்றனர். சுயதொழில் செய்பவர்கள் சராசரியாக 7 மாத ஊதியத்தையும், தொழிலாளர்கள் 15 மாத ஊதியத்தையும் செலவு செய்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெகாசஸ் விவகாரம்- விசாரணைக்கு பிரான்ஸ் உத்தரவு: பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் தலைவர்களை வேவு பார்த்த விவகாரத்தில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பெயரும் இடம்பெற்றதால் விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

வெள்ளப்பெருக்கு - 16 பேர் உயிரிழப்பு: சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 16 பேர் உயிரிழந்தனர். வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. மெட்ரோ சுரங்கங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கடைசி நேரத்தில்கூட ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு: கொரோனா பரவல் அதிகரித்தால் கடைசி நேரத்தில்கூட ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக்கின் முதன்மை செயல் அதிகாரி தொஷிரோ முட்டோ பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

பிரிஸ்பேனில் 2032 ஒலிம்பிக் போட்டி: 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் நடத்துவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.