தமிழிசை சௌந்தரராஜன்  file image
தமிழ்நாடு

"முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள் தி.மு.கவினர்"; தமிழிசை சௌந்தரராஜன் காட்டம் - பின்னணி என்ன?

தமிழக உரிமையை விட்டுக்கொடுத்து விட்டு, சனாதனம் என்று கூறி மக்கள் உணர்வோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

PT WEB

தூத்துக்குடி விமான நிலையத்தில் தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை  சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழக அரசிடம் இருந்து தீபாவளி வாழ்த்து கிடைக்காது. அதனால் சகோதரியாக அனைவருக்கும் தீபாவளி  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தென்பகுதிக்கு வருவது தாய் வீட்டிற்கு வருவதுபோல் மகிழ்ச்சியாக உள்ளது. சாதனை படைத்துக் கொண்டிருக்கும் தென்தமிழகம் தற்போது சாதி பிரச்னையினால் மிகக்  கொடூரமாகப்  பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.

தச்சநல்லூரில் இரண்டு இளைஞர்கள் மீது, சாதியை சுட்டிக் காட்டி சிறுநீர் கழிக்கப்பட்டது வேதனையாக உள்ளது. தமிழகத்தில் சாதிய வன்முறைகள் அதிகரித்துள்ளது. நாங்குநேரி நிகழ்வு, வேங்கை வயலில் குடிநீரில் மலம் கழிப்பு, மனிதர் மீது சிறுநீர் கழிப்பது ஆகிய சம்பவங்கள் கவலை அளிக்கிறது. அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீட் தான் முக்கிய பிரச்னை என்ற மாதிரி அதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

உதயநிதி சனாதனம் பற்றிப் பேசியது குறித்து மன்னிப்பே கேட்கமாட்டேன். நான் சொன்னது சொன்னதுதான் என்று கூறுகிறார். மன்னிப்பு கேட்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

காவிரி கூட்டத்தைப் புறக்கணிப்போம் என்று சொல்லுகின்றனர். நட்பு ரீதியாக ஒரு அரசாங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அதை உங்களால் பெற்றுத் தர முடியவில்லை என்றால் ஏன் அனைவரும் சேர்ந்து வெற்றி பெற வைத்தீர்கள். உங்களுடைய தோழர்கள்தான் கர்நாடகாவை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்றால் அந்த தோழமையை வைத்து தமிழகத்திற்குத் தண்ணீர் பெற்றுத் தருவதற்கு ஏன் நீங்கள் பயன்படுத்தக் கூடாது. தமிழக உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு வேண்டாதவற்றை சனாதனம் என்று மக்கள் உணர்வோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேச்சு மிக மிகக் கண்டிக்கத்தக்கது. மேற்கு வங்கத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர் பணம் வாங்கிக்கொண்டு கேள்வி கேட்கிறார். எதிரில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒவ்வொன்றாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய காலகட்டம். பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு வலுவாக மரியாதை கொடுத்துக் கொண்டிருக்கின்றார். 33% இட ஒதுக்கீடு சிறிது நாட்கள் கழித்து வருவதை எதிர்க்கும் இவர்கள், சாமானிய பெண்களுக்கு மரியாதை கொடுக்க தயங்குகிறார்கள்.

யார் ஊழல் பண்ணினாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். தமிழகத்தில் இரண்டு அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியது. அரசியல் காழ்ப்புணர்ச்சியினால்தான் எனச் சிலர் கூறுகின்றனர். உங்கள் வீட்டில் பணம் எடுக்கவில்லை என்றால் பரவாயில்லை. கட்டி கட்டியாகத் தங்கம், கட்டுக் கட்டாகப் பணம் இருக்கின்றது. அப்படியானால், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள்.

பாரத தேசத்தைப் பொறுத்தவரை சட்டரீதியாக நம் தேசத்தைச் சார்ந்தவர்கள் எங்கும் பாதிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்" என்றார்.