தமிழ்நாடு

தீ விபத்துக்கு காரணம்‌ திருஷ்டி சுற்றிய சூடமா‌?

தீ விபத்துக்கு காரணம்‌ திருஷ்டி சுற்றிய சூடமா‌?

rajakannan

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பா‌க கடை உரிமையாளர் ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுர வளாகத்தில் உள்ள 35க்கும் மேற்பட்ட கடைகளில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அதையடுத்து 5 தீயணைப்பு வண்டிகள் மூலம் மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இதனிடையே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், தீ விபத்து தொடர்பா‌க கடை உரிமையாளர் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முருகபாண்டி என்ற அந்த கடை உரிமையாளர், தீவிபத்து நடந்த கடந்த 2 ஆம் தேதி இரவில் கடைக்கு சூடம் ஏற்றி திருஷ்டி சுற்றிப்போட்டது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. இந்த கடைதான் கடைசியாக மூடப்பட்டதோடு, அங்குதான் முதலில் தீ விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. கடை உரிமையாளர் முருகபாண்டி, திருஷ்டி சுற்றிப்போட்டவர், கடை ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்துவருகிறது. மதுரை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மீனாட்சி அம்மன் கோவில் காவல்நிலையத்தில் இந்த விசாரணை நடந்துவருகிறது. 

இதற்கிடையே கோயிலில் எதிர்காலத்தில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 துறைகள் கொண்டு குழுவை அமைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார். தீயணைப்பு, வருவாய், பொதுப்பணி, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் குழுவில் இருப்பார்கள் என ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள கடைகள் அனுமதியுடன் இயங்குகிறதா என்பது குறித்தும் இந்த குழு ஆய்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது.