கோவை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் உள்ளிட்ட எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்த நிலையில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக மூஸா மொய்தீன் உள்ளிட்ட 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அவர் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில், தாங்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதாகவும், தங்களுக்கு கருணை அடிப்படையில் சில நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தனர். அது நிலுவையில் இருந்து வருகிறது. வழக்கு நிலுவையில் இருப்பதால், தங்களுக்கு குறைந்தபட்சம் ஜாமினாவது வழங்கவேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். சமீபத்தில் விசாரணைக்கு வந்த அந்த மனு, நான்கு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் “சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரும் தற்பொழுதும் தங்களது பழைய சித்தாந்தத்தில் இருக்கின்றனர். அவர்களின் சிறை செயல்பாடுகளில் கூட திருப்தி ஏதும் இல்லை. அலைபேசிகளை பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்து விதிமுறை மீறல்களும் ஈடுபடுகின்றனர். ஆகவே இவர்களுக்கு ஜாமின் உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் பட்சத்தில் மீண்டும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். எனவே இவர்களது ஜாமீன் கோரிய உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனவும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்திய செய்தி: தூத்துக்குடி: நிலப்பிரச்னையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு விவசாயி எடுத்த விபரீத முடிவு