தமிழ்நாடு

”ஆவின் பால் எடை குறைவு சர்ச்சையில் அரசின் நடவடிக்கை போதுமானதல்ல” - அண்ணாமலை

”ஆவின் பால் எடை குறைவு சர்ச்சையில் அரசின் நடவடிக்கை போதுமானதல்ல” - அண்ணாமலை

webteam

ஆவின் பால் எடை குறைவு சர்ச்சையில் அரசின் நடவடிக்கை போதுமானதல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பால் விஷயத்தில் அரசு மீது நம்பிக்கையின்மை ஏற்படுகின்றது என்றும், ஆவின், பால்வள அமைச்சர், முதலமைச்சர் ஆகியோர் தெளிவுப்படுத்தாது ஆச்சர்யம் மட்டுமல்ல, அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

பாரதிய ஜனதாவுக்கு நேர் எதிரான கொள்கை கொண்ட திமுகவுடன் கூட்டணி என்பது சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மாநிலத்திற்கு சுயாட்சி வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல எனவும், திமுகவின் பேச்சு பாஜகவின் மரபணுவுக்கு எதிரானது என்றும், முரண்கள் மிகுந்த திமுகவுடன் கூட்டணிக்கு அமையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த ஜூலை 30-ம் தேதி நுகர்வோர் ஒருவருக்கு குறைவான எடையில் ஆவின் பால் பாக்கெட் விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, குறைவான எடையில் ஆவின் பால் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கோரியிருந்தார். எத்தனை நாட்களாக மக்கள் இதுபோல ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்று ஒரு முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியிருந்தார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக விளக்கமளித்த ஆவின் நிர்வாகம், நுகர்வோர் நலன் பேணும் வகையில் அனைத்து தரம் மற்றும் அளவுகள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்திற்கு உட்பட்டு பால் விநியோகம் செய்வதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இயந்திர தொழில்நுட்பம் காரணமாக ஏதேனும் அளவு குறைவாக இருப்பின் உடனடியாக நுகர்வோர்களுக்கு மாற்று பால் பாக்கெட் வழங்கப்படும் எனவும் விளக்கமளித்துள்ளது.