தமிழ்நாடு

”இதனை மீறினால் உடனடி நடவடிக்கை” - கட்சியினருக்கு தமிழக பாஜகவின் புதியக் கட்டுப்பாடுகள்!

”இதனை மீறினால் உடனடி நடவடிக்கை” - கட்சியினருக்கு தமிழக பாஜகவின் புதியக் கட்டுப்பாடுகள்!

webteam

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று அடுத்தடுத்து 3 அறிக்கைகளை வெளியிட்டு மாநில பா.ஜ.க.வில் பல்வேறு புதியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதுகுறித்து விரிவாக இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

அதிமுக கட்டுப்பாடுகள் உள்ள கட்சிகளில் ஒன்றாக பா.ஜ.க பார்க்கப்படுகிறது. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலோ, கட்சி தலைமைக்கு எதிராகவோ கருத்துக்களை வெளியிடும் தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை உடனடியாக நீக்கம் செய்யப்படுவது வாடிக்கை. தமிழக பா.ஜ.க.வை பொருத்தமட்டில் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவதற்காக தயாராகி வரும் நிலையில் சில நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் பேச்சுக்கள் மற்றும் கட்சி குறித்த அவர்களது கருத்துக்கள் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் கட்சிக்கு தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததாக தெரிவித்து, வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் பிரிவு தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராமை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து அடுத்த 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதற்கு ட்விட்டர் வாயிலாக பதில் அளித்துள்ள காயத்ரி ரகுராம், “கட்சியில் இருந்து நீக்கியதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. இடைநீக்கத்துடன் தேசத்திற்காக உழைப்பேன்” என தெரிவித்துள்ளார். இதேபோன்று ஒரு பெண்ணுடன் அவதூறாக பேசிய திருச்சி சூர்யாவின் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கை சமர்ப்பிக்கும் வரை ஓ.பி.சி.அணி மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் யூடியூப் சேனல்களுக்கு கட்சியின் அனுமதியின்றி பேட்டி அளிக்க முழுமையாக தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளிக்க விருப்பப்பட்டால் மாநில ஊடகப் பிரிவின் தலைவர் ரங்கநாயக்கலு அவரிடம் தெரியப்படுத்தி ஒப்புதல் பெற்ற பிறகு பேட்டியளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது உடனடியாக கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் அவதூறாக கருத்து தெரிவித்து வருவதால் கட்சிக்கு அவப்பெயரும், கூட்டணி கட்சிகள் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதால் பா.ஜ.க. தமிழக தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும் கட்சித்தலைமை திட்டமிட்டு இருக்கிறது.

- விக்னேஷ்முத்து