மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திரமோடி வரவேற்றார். ஷி ஜின்பிங்கை வரவேற்க தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் மாமல்லபுரம் வந்தார் மோடி.
இதன் பின்பு பல்வேறு மாமல்லபுரம் சிற்பங்களை குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்கி வருகிறார். மாமல்லபுரத்தில் அர்ஜூனன் தபசு பகுதியில் மோடியை சந்தித்த சீன அதிபர் கைகுலுக்கினார். 63 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற்றது.
மாமல்லபுரத்தில் ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்து விளக்கியவாறு சீன அதிபருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் பிரதமர் மோடி.
மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறை முன் இருவரும் கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். வெண்ணெய் உருண்டை பாறை முன் நின்றவாறு பிரதமர் மோடி, சீன அதிபருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதனையடுத்து, மாமல்லபுரத்தில் கடற்கரை கோயிலுக்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் சென்றனர். கடற்கரை கோயில் மின்னொளியில் ஜொலித்தது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சீன அதிபருக்கு அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி.