தமிழ்நாடு

மயக்கம் தெளிந்து உணவு உட்கொள்ள தொடங்கிய டி23 புலி

மயக்கம் தெளிந்து உணவு உட்கொள்ள தொடங்கிய டி23 புலி

Sinekadhara

மைசூர் வனவிலங்குகள் மீட்பு மற்றும் சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட T23 புலி மயக்கம் தெளிந்து உணவு உட்கொள்ளத் தொடங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒன்றரை ஆண்டுகளாக சுற்றி வந்து, 4 மனிதர்களையும், 30க்கும் அதிகமான கால்நடைகளையும் T23 புலி வேட்டையாடியது. அதனை உயிருடன் பிடித்து பராமரிக்க வேண்டும் என்ற இலக்கோடு, 100க்கும் அதிகமான வனத்துறையினர் 21 நாட்கள் அடர் வனப்பகுதியில் அலைந்து திரிந்தனர். கால்தடத்தை கொண்டும், தானியங்கி கேமராக்கள், ட்ரோன்கள், மோப்பநாய்கள், கும்கிகள் என புலியை பிடிக்கும் பணி தொடர்ந்தது. நீண்ட தேடுதலுக்கு பிறகு, அக்டோபர் 14ஆம் தேதி இரவு 10 மணியளவில் டி23 புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மிகவும் சோர்வுடன் மசினகுடி பகுதியில் சுற்றி வந்த புலியை, குறிப்பிட்ட இடைவெளியில் பின் தொடர்ந்த வனத்துறையினர், நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் 2ஆவது மயக்க ஊசியை செலுத்தினர்.

முற்றிலும் மயங்கிய புலியை கூண்டில் அடைத்து, மைசூருவிலுள்ள மறுவாழ்வு மையத்துக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். அப்போது, பாதிவழியிலேயே மயக்கம் தெளிந்து எழுந்த புலி, தான் கூண்டுக்குள் அடைபட்டிருந்ததை அறிந்து ஆக்ரோஷத்துடன் பார்த்தது. புலியை பரிசோதித்த மருத்துவர்கள், அதன் உடலில் மிகப்பெரிய காயங்கள் இருப்பதாகவும், நீர்ச்சத்து மற்றும் இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்து புலி மிகவும் சோர்வுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதே சமயம் மயக்கம் தெளிந்துவிட்டதால், கூண்டுக்குள் ஆக்ரோஷமாக உறுமி வருவதாகவும் கூறப்படுகிறது. புலிக்கு தேவையான சிகிச்சையும், உணவும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.