நிதிஷ் ஆதித்யா pt web
தமிழ்நாடு

துணை நடிகர் கார்த்தியின் மகன் கார் விபத்தில் உயிரிழப்பு; சீட் பெல்ட் அணியாததால் நேர்ந்த சோகம்

இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் போடுவதைப்போல காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் போடுவது அவசியம். ஆனால், இதனை பின்பற்றாமல் காரில் அதிவேகமாக சென்ற இளைஞர் உயிரிழந்த சோகம் நேரிட்டுள்ளது.

ஜெ.அன்பரசன்

சென்னை RA புரம் பகுதியைச் சேர்ந்த நடிகர் கார்த்தி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்களிலும் தெய்வமகள் சீரியலிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது மகன் நித்திஷ் ஆதித்யா, பொறியியல் 3 ஆம் ஆண்டு படித்துவந்தார். தீபாவளி விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் காரில் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு விளையாடச்சென்றுள்ளார்.

அங்கிருந்து திரும்பி வரும்போது, நள்ளிரவு 2 மணி அளவில், வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. விபத்தில் நித்திஷ் ஆதித்யன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் காரில் பயணம் செய்த அவரது நண்பர்களான ஜெயகிருஷ்ணன் மற்றும் வெங்கட் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். காரில் பயணம் செய்த மூவரும் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததே இந்த அளவு பாதிப்புக்கு காரணம் என்று வேதனையுடன் கூறுகிறார் நித்திஷின் உறவினர்.

சீட் பெல்ட் போட்டிருந்தால், காயங்களுடன் உயிர்தப்பியிருக்க வாய்ப்புள்ளது என்று துயரம் படிந்த குரலில் கூறுகிறார். இப்போது எதை பேசியும் பயனில்லை. விபத்தில் தங்கள் செல்ல மகனை பறிகொடுத்திருக்கும் பெற்றோருக்கு ஆறுதலைத்தான் கூற முடியும்.. இந்த நிகழ்வைப் படிப்பிணையாக எடுத்துக்கொண்டு காரில் செல்வோர், சீட் பெல்ட் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.