சென்னை மாநகரில் பல்வேறு வழித்தடங்களில் அன்றாடம் பல புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அப்படி இன்று அதிகாலை 4.55 மணியளவில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் மின்சார ரயிலொன்று புறப்பட்டுச் சென்றது.
அப்போது சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்த ரயில், அங்கிருந்து புறப்பட்ட போது ரயிலின் நான்காவது ஐந்தாவது பெட்டிகளுக்கு இடையேயான இணைப்பு திடீரென பலத்த சத்தத்துடன் துண்டித்து சற்று பின்னோக்கி சென்றது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் மற்றும் ரயில் நடைமேடையில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து ரயில் ஓட்டுனர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்ற விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இந்த ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் ரயில் சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து தனியாக கழன்று நின்ற ரயில் பெட்டிகள் தற்போது சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து, கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.