மாணவிகள் PT
தமிழ்நாடு

சாதி சான்றிதழ் வழங்க கோரி ஆதியன் பழங்குடியின மாணவர்கள் 2-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு!

ஆதியன் பழங்குடி (ST) சாதிச் சான்றிதழ் கேட்டு திருவாரூர் மாவட்டத்தில் ஆதியன் பழங்குடி வகுப்பைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டாவது நாளாக வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

PT WEB

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, ஆப்பரகுடி, விளத்தூர், முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதியன் பழங்குடி வகுப்பை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குழந்தைகள் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கச்சனம், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வருகிறார்கள்.

இம்மாணவர்களின் பிரச்னை குறித்து இந்து ஆதியன் வகுப்பின் மாவட்ட தலைவர் அன்புமணி கூறுகையில், “இம்மாணவர்கள் பள்ளியில் சேர்கையில் இந்து ஆதியன் வகுப்பில்தான் சேர்க்கப்படுகின்றனர். அப்போது, சாதிச் சன்றிதழ் தேவைப்படுவதில்லை. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு இவர்கள் செல்லும்போதுதான், பள்ளி நிர்வாகம் சார்பில் சாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது.

அதற்காக அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தையோ கோட்டாட்சியர் அலுவலகத்தையோ நாடும்போது. அவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஜோகி பிரிவினர் என சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. பெறப்பட்ட சாதி சான்றிதழின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெறுகின்றனர். அதன்பிறகு 12-ம் வகுப்பு, கல்லூரி படிப்புகளையும் இதே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் கொண்டு பயின்று வருகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் எங்கள் மாணவர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு கிடைப்பதால், அரசு சலுகைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. எங்களுக்கு எங்களுடைய உண்மையான பிரிவான இந்து ஆதியன் (ST) பிரிவில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். அரசு சலுகைகள் அனைத்தையும் பெற்று, நாங்கள் பொருளாதாரத்திலும் கல்வியிலும் உயர உரிய வழிவகை செய்ய வேண்டும்” என கோரிக்கை வைக்கிறார்.

மேலும் அவர், “இதே திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் தாலுகாவில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் இம்மக்களின் நெருங்கிய ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் பலர் உள்ளனர். அவர்கள் பகுதியில் இருக்கக்கூடிய அதிகாரிகள், சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் உரிய ஆய்வு மேற்கொண்டு இந்து ஆதியன் என சான்றிதழ் கொடுத்து விட்டார்கள். ஆனால் இதே திருவாரூர் மாவட்டத்தில் வாழக்கூடிய எங்களுக்கு அச்சான்றிதழை மன்னார்குடி கோட்டாட்சியர் தர மறுக்கிறார்” என குற்றம் சாட்டினார்.

இப்பிரச்னைக்கு முடிவுகாணும் வகையில் இப்பகுதி மக்கள், தங்கள் வீட்டு பிள்ளைகளை நேற்றும் இன்றும் பள்ளிக்கு அனுப்பவில்லை. மாணவர்கள் அவரவர் வீட்டில் இருந்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் பெற்றோர் பேசும்போது, “மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிடவேண்டும். நாங்கள் உண்மையான இந்து ஆதியனா என்பதை ஆராய்ந்து, எங்களுக்கு உரிய வகுப்பு சான்றிதழை வழங்கவேண்டும். எங்களுடைய பிள்ளைகள் உயர் கல்வியை நல்ல முறையில் படித்து அரசின் சலுகைகளை பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் வைத்தனர்.

தற்போதைக்கு இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில், திருத்துறைப்பூண்டி தாலுகா ஆப்பரகுடி பகுதியில் மட்டும் ஆதியின் பழங்குடி வகுப்பைச் சார்ந்த பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவில் அவர்களிடம் ‘இன்று எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம்’ என உறுதிமொழி கடிதம் வாங்கி சென்றனர்.

இருப்பினும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள மற்ற பகுதிகளான திருத்துறைப்பூண்டி, விளத்தூர், முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் செல்லவில்லை. ஆகவே அப்பகுதிகளிலெல்லாம் இரண்டாவது நாளாக இன்றும் ஆதியின் பழங்குடி வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.