தமிழ்நாடு

தைரியமாக போலீஸில் சொன்ன உதவி பேராசிரியை - தகாத வீடியோ எடுத்த மாணவர் கைது

தைரியமாக போலீஸில் சொன்ன உதவி பேராசிரியை - தகாத வீடியோ எடுத்த மாணவர் கைது

webteam

பல்கலைக்கழக உதவி பேராசிரியையை அழைத்து சென்று தகாத வீடியோ எடுத்த மாணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் உதவி பேராசியராக பணிபுரிந்து வருபவர் ரீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (25). இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். அதே கல்லூரியில் தொலைதூர கல்வியில் விவேஷ் (22) என்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவன் படித்து வந்துள்ளார். 

இருவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் விவேஷும் ஆசிரியரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதையடுத்து விவேஷ் கடந்த வாரம் தன்னுடைய படிப்பு முடிந்து விட்டதாகவும், தான் ஆந்திராவுக்கே செல்ல இருப்பதாகவும் ஆசிரியரிடம் கூறியுள்ளார். ஆந்திராவிற்கு செல்வதற்கு முன்பு உங்களுக்கு ட்ரீட் கொடுக்க வேண்டும் என நினைப்பதாக ரீனாவிடம் விவேஷ் கூறியுள்ளார். 

நண்பர்களாக பழகியதால் அவரை நம்பிய ஆசிரியை விவேஷுடன் செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சோழிங்கநல்லூர் சென்று விடுதியில் இருந்த உதவி பேராசிரியரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மகாபலிபுரம் செல்ல கிழக்கு கடற்கரை சாலை வழியே சென்றுள்ளார் விவேஷ். 

அப்போது மகாபலிபுரம் அருகே உள்ள ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்று உதவி பேராசிரியையை கத்தியை காட்டி மிரட்டி தகாத முறையில் வீடியோ, மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் தன்னுடன் தகாத உறவில் ஈடுபட வேண்டும் என மிரட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். ஆசிரியை எவ்வளவு கெஞ்சியும் கேட்காத விவேஷ் பின்னர் ரீனாவை அழைத்து வந்து சோழிங்கநல்லூர் விடுதியில் விட்டு விட்டு சென்றுள்ளார். 

அன்று முதல் ரீனாவை செல்போனில் தொடர்பு கொண்டு விவேஷ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். செய்வதறியாது தவித்த உதவி பேராசிரியர், மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு செம்மஞ்சேரி போலீசில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் போலீசார் அடுத்த முறை விவேஷ் அழைத்தால் தைரியமாக செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன் பேரில் விவேஷ் கோயம்பேடுக்கு வர சொல்லியதையடுத்து உதவி பேராசிரியரும் அங்கு சென்றார். அங்கு காத்திருந்த செம்மஞ்சேரி போலீசார் விவேஷை கையும் களவுமாக பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், அவர் செல்போனில் இருந்த வீடியோவையும் போலீசார் அழித்தனர்.