பட்டியில் அடைத்திருந்த 27 ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் குதறியதால் பரிதாபமாக அவை உயிரிழந்தன.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜய்யா (52) மற்றும் அவரது மகன் பகவதி குமார் (30) ஆகிய இருவரும் சுமார் 150 ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தம்மிநாயக்கன்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான முருங்கை தோட்டத்தில், கிடை போடுவதற்காக 30 ஆட்டுக் குட்டிகளை விட்டு விட்டு மற்ற பெரிய ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து முருங்கை தோட்டத்தில் இருந்த 30 ஆடுகளை இப்பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்துக் குதறிக் கொண்டு இருந்துள்ளது. அதை அவ்வழியாக வந்த ஒரு விவசாயி பார்த்து நாய்களை விரட்டி விட்டு ராஜய்யாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் தெரிந்து அங்கு வந்த ராஜய்யா பார்த்தபோது நாய்கள் கடித்துக் குதறியதில் 27 ஆட்டுக் குட்டிகளும் பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளன.
இதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு ராஜய்யா தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தேவாரம் கால்நடை மருத்துவர், தம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர்.