அஞ்செட்டி தாலுகாவில் பள்ளிக்கூடத்தையும், பள்ளிக்கூட கழிவறையையும் மாணவர்களை கைகளால் சுத்தம் செய்ய வைப்பதாக எழுந்த புகார் குறித்து 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு பள்ளி கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி தாலுகா மரியாளம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்களை பள்ளி வளாகத்தையும், பள்ளி கழிவறையையும் வெறும் கைகளால் சுத்தம் செய்ய வேண்டும் என
கட்டாயப்படுத்துவதாகவும் மாணவர்களை கொடுமை படுத்தி வரும் தலைமை ஆசிரியை அன்னை வேளாங்கண்ணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் எழுந்தது.
மேலும், அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் வித்யா என்கின்ற மாணவி பள்ளியில் உள்ள ஒலிபெருக்கியை திருடி விட்டதாக கூறி அந்த மாணவியை தலைமையாசிரியர் அவமானப்படுத்தியதோடு, காவல்துறையில் புகார் அளிப்பதாக கூறி அந்தப் பெண்ணை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வித்யா வீட்டில் கூற அவரது தந்தை சிவா, அடுத்த நாள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் கேட்டபோது, உன் மகள் தான் திருடியதாகவும், தான் இந்த விவகாரத்தை விட போவதில்லை எனவும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி வித்யா புகார் மனு எழுதி மற்ற மாணவர்களின் பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்கி தன் தந்தையுடன் ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட ஓசூர் சார் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்நிலையில், மாணவர்கள் புகார் குறித்து 2 வாரத்திற்குள் உரிய பதிலளிக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் பள்ளி கல்வி இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.