திருவள்ளூரில் சாலையில் காய்கறியைக் கொட்டி விவசாயி போராட்டம் செய்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் அகரம்கண்டிகை கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர், தமது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை சென்னை கோயம்பேடு சந்தைக்கு இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய வெங்கல் காவல் ஆய்வாளர், 2 மணி நேரமாக காக்க வைத்துள்ளார். இதனை அடுத்து டிஎஸ்பி வாகனத்தின் முன்பு காய்கறிகளை கொட்டி அந்த விவசாயி போராட்டம் நடத்தினார்.
இதனையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவலர்கள், அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த செய்தி புதிய தலைமுறையில் ஒளிபரப்பானது. இதன் எதிரொலியாக திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன், கார்த்திக்கின் வீட்டிற்கே சென்று, அவரை சந்தித்தார். பின்னர், விவசாயி கார்த்திக்குக்கு 50 கிலோ அரிசி, 25 கிலோ காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார். அப்துல் கலாம் புத்தகம் ஒன்றையும் எஸ்பி அரவிந்தன் வழங்கினார். மேலும், கார்த்திக்கிடம் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனமும் விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணையம், இந்த விவகாரம் குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அரவிந்தன் விரிவாக விசாரணை நடத்தி 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது