காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொலைகளை, “உடல்நலக்குறைவால் மரணம்” என்று மனசாட்சி இல்லாமல் மறைத்த பழனிசாமி முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
துக்க்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர், “ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கு விசாரணையை உடனடியாக சி.பி.சி.ஐ.டி மேற்கொள்ள வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு, கணவரையும் - மகனையும் இழந்து நிற்கும் அந்தக் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதற்கட்ட நீதி. இந்த வழக்கினை விசாரணை செய்ய சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குச் சென்ற நீதிபதியை, முதலமைச்சர் பழனிசாமியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் நேற்றைய தினம் மிரட்டியிருக்கிறார்கள்.
ஜ
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைப் பதிவாளரிடம் கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் 29.6.2020 மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள அறிக்கையைப் பார்க்கும் போது - ஒரு நீதித்துறை நடுவருக்கே காவல் நிலையத்தில் இந்தக் கொடுமை என்றால், ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அந்தக் காவல் நிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தியிருப்பார்கள்; எப்படியெல்லாம் விடிய விடிய லத்தியால் அடித்துத் துன்புறுத்தியிருப்பார்கள் என்பதை நினைத்து நெஞ்சம் பதறுகிறது.
“ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் தரையில் அமர்ந்து புரண்டதால் ஊமைக் காயம் ஏற்பட்டது” என்று போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை பொய்யானது என்பதற்கு ஆதாரமாக, ஜெயராஜின் பக்கத்துக் கடையில் இருந்த கேமிராவில் உள்ள வீடியோ காட்சிகள் நேற்றைய தினம் வெளியானது. இப்போது காவல் நிலையமே ரத்தக்களறியாக இருந்திருக்கிறது என்பது போன்ற நீதித்துறை நடுவரின் அறிக்கை அதை நிரூபித்துள்ளது.
இருவரும் “உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்” “மூச்சுத் திணறல் ஏற்பட்டதால்” மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்தார்கள் என்று முதலமைச்சர் சொன்னதன் பின்னணி இந்த “ரத்தக் களறியை” மறைக்கத்தானே? குறிப்பாக, “காவல் நிலைய மரணம் அல்ல” – இது ஏதோ நீதிமன்றக் காவலில் ஏற்பட்ட விவகாரம் என்று திசை திருப்பத்தானே?
இரட்டைக் கொலையை மறைக்க சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகளுடன் முதலமைச்சரும் இணைந்தே செயல்பட்டார் என்பதைத் தவிர, இதற்கு வேறு என்ன அர்த்தம்? போலீஸ் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு காவல் நிலையத்தையே நிர்வகிக்க முடியாமல் தோல்வியடைந்த- காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொலைகளை, “உடல்நலக்குறைவால் மரணம்” என்று மனசாட்சி இல்லாமல், உண்மையை வேண்டுமென்றே மறைத்த பழனிசாமி தனது முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார். எனவே, அவர் உடனடியாக முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.