தமிழ்நாடு

ஆசிரியர்கள் போராட்டம் - தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

ஆசிரியர்கள் போராட்டம் - தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

webteam

அறவழியில் போராடும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இன்றைக்குள் பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள், காலிப்பணியிடங்களாக கருதப்பட்டும் என்றும் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் தமிழக அரசின் எச்சரிக்கையும் மீறி தமிழகம் முழுவதும் இன்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத்திரும்ப பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினால், தாங்கள் விரும்பும் ஊர்களுக்கு பணியிட மாற்றம் பெறலாம் என்றும், இல்லாவிட்டால், அந்த இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினரை உடனடியாக அழைத்து பேசி போராட்டத்தை அரசு சுமூக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தற்போதைய நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் போராட்டத்தை தீவிரமாக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.