இலங்கை நிகழ்ச்சி ட்விட்டர்
தமிழ்நாடு

இலங்கை: மலையகத் தமிழர்கள் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதா?

இலங்கையில் நடைபெற்ற மலையகத் தமிழர்கள் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காணொளி உரை திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Prakash J

இலங்கையில் மலையக மக்கள் குடியேறி 200 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு, கொழும்பில் கடந்த 2ஆம் தேதியன்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் தலைமையில் ’நாம் 200’ என்ற தலைப்பில் மலையகத் தமிழர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இந்தியா தரப்பில் இருந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர், அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்க அனுமதி கோரப்பட்டிருந்தத நிலையில், உரிய நேரத்தில் அனுமதி கிடைக்காததால், அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டதால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை பதிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகதான் வீடியோ பதிவு கிடைத்ததால், அதை ஒளிப்பரப்ப முடியவில்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த மேத்யூஸ்! Timed Out - விதி என்ன?

மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததாலேயே மலையகத் தமிழர்கள் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஒளிப்பரப்பப்படவில்லை என்றும், திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதல்வரின் உரை புறக்கணிக்கப்பட்டது கண்டனத்திற்குறியது. இலங்கை மலையக தமிழக விழாவில் முதல்வருக்கு பதில் நான் கலந்துகொள்ள இருந்தேன். மத்திய அரசிடம் இருந்து அனுமதி முந்தையநாள் இரவு வரை கிடைக்கவில்லை; என்னுடைய பயணத்தை ரத்துசெய்த நிலையில் மத்திய அரசு அனுமதி கிடைத்தது; வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காததால் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை. முதலமைச்சர் வாழ்த்து செய்தி ஒளிபரப்பு செய்யாததற்கு என்ன காராணம் என தெரியவில்லை; முதல்வரின் உரையை புறக்கணிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதுதொடர்பாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர், ”நிகழ்ச்சி 4 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில், பிற்பகல் 2-3 மணிக்குதான் முதலமைச்சரின் வீடியோ கிடைத்தது. அரசு விழா என்பதால் நிகழ்ச்சி நிரலுக்கு முன் அனுமதிபெற வேண்டியது அவசியம். காணொளி உரையை ஒளிபரப்புவதில் நடைமுறைச் சிக்கல்தானே தவிர, வேறெதுவும் இல்லை” எனப் பதிலளித்துள்ள அவர், “முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து இலங்கை அதிபர் ரணில் கடிதம் எழுதியிருப்பதாகவும், அவர் இலங்கைக்கு வரவேண்டும் என அதிபர் அழைப்பு விடுத்திருப்பதாகவும்” ஜீவன் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: "நான் வேதனைப்படுகிறேன்; பயமாக இருக்கிறது" - Deep fake வீடியோ.. நடிகை ராஷ்மிகா மந்தனா உருக்கமான பதிவு