தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கை போலீஸ்காரரை நீதிமன்றக் காவலில் எடுத்த சிபிசிஐடி காவல்துறையினர் தனுஷ்கோடியில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை அடுத்த கம்பிபாடு கடற்கரையில் செப். 5ஆம் தேதி பைபர் படகு மூலம் இலங்கையிலிருந்து தப்பி வந்தவரை மண்டபம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இலங்கை மொனார்கலா மாவட்டம் சியம்பலன்டுவா பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் பண்டாரா (30) என்பதும், சிங்களரான இவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் போலீஸ்காரராகப் பணியாற்றியதும் தெரிந்தது. போலீஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ்கந்த பகுதியிலுள்ள மர கடையிலிருந்து இலங்கை போலீசாரால் கைப்பற்றப்பட்ட 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் மர கடையின் உரிமையாளர் மற்றும் காவலர் பிரதீப் குமார் பண்டாராவின் சகோதரர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், தன்னையும் கைது செய்துவிடுவார்கள் என்பதால் தமிழகத்துக்கு தப்பி வந்ததாக தெரிவித்தார்.
பிரதீப்குமார் பண்டாராவுக்கும்;, கோவையில் உயிரிழந்த இலங்கை நிழலுலக தாதா அங்கட லொக்காவுக்கும் போதை பொருள் விற்பனையில் தொடர்பு உள்தாக கூறப்பட்டதால் இந்த வழக்கை தமிழக டிஜிபி கடந்த 7-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றினார். தொடர்ந்து செப்டம்பர் 17 அன்று பிரதீப் குமார் பண்டாராவை காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண். 2-ல் சிபிசிஐடி போலீஸார் மனுத்தாக்கல் செய்து அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றனர்.
இந்நிலையில் கோவை மண்டல சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனுஷ்கோடியை அடுத்த கம்பிபாடு கடற்கரைக்கு பிரதீப் குமார் பண்டாராவை அழைத்து வந்து போலீசார், தொடர்ந்து அப்பகுதி மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.