எஸ்.பி.வேலுமணி, நயினார் நாகேந்திரன் கோப்பு படம்
தமிழ்நாடு

“இது முற்றிலும் தனிப்பட்ட சந்திப்பே” - யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.பி.வேலுமணி!

நயினார் நாகேந்திரனைச் சந்தித்தது மகனின் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக மட்டுமே என விளக்கமளித்துள்ளார் எஸ்.பி.வேலுமணி.

சண்முகப் பிரியா . செ

நேற்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக கழகக் கள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி, கூட்டத்திற்கு பின் நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் பாஜகவின் சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் இல்லத்திற்கு சென்றார். இது அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பியிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள எஸ்.பி வேலுமணி, “நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கழகக் கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினேன். அதன்பிறகு எனது குடும்ப நண்பர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினேன். அப்பொழுது, முன்னாள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வை, அரசியல் சாயம் பூசி செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் கழகத்தை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. இந்நிலையில் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களுக்கும் எனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக செய்தி வெளியிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எஸ்.பி.வேலுமணி, நயினார் நாகேந்திரன் இடையிலான சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்களையும் சந்தேக அலைகளையும் எழுப்பியிருந்த நிலையில் அது முற்றிலும் தனிப்பட்ட சந்திப்பு என்றுகூறி, வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.