chennai traffic pt desk
தமிழ்நாடு

தீபாவளி கொண்டாட்டம்... சென்னையில் இருந்து கொத்து கொத்தாக கிளம்பும் சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கிய நிலையில் சென்னையில் இருந்து ஏராளமானோர் நேற்று சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். மழை மற்றும் வாகனங்கள் நெருக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

webteam

சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் 550 சிறப்பு பேருந்துகள் உள்பட மொத்தம் 3,465 பேருந்தகள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து தீபாவளியை கொண்டாட தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் இரண்டாவது நாளான இன்று 3,995 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

public

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டப்படி கோயம்பேடு உள்பட 5 இடங்களில் இருந்து நேற்று பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழைக்கு இடையே சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் ஏராளமானோர் புறப்பட்டுச் சென்றதால் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்து நின்றன. அதேபோல் தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித் தவித்தன.

ஜி.எஸ்.டி சாலையில் சிறப்பு பேருந்துகள் ஒருபக்கம், கடைகளுக்குச் சென்ற மக்கள் மறுபக்கம் என்றால் இன்னொருபக்கம் மழையும் பெய்தது. இவை போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்தியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. எனினும் ஆம்னி பேருந்துகள் சென்னை மாநகர் பகுதிகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் வழக்கமான பண்டிகைகால நாட்களைவிட போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டது.