G Square Twitter
தமிழ்நாடு

GSquare ரெய்டு விவகாரம்: வார இதழ் மீது சபரீசன் தரப்பு அவதூறு வழக்கு?

தனியார் வார இதழின்மீது, முதல்வரின் மருமகன் சபரீசன் தரப்பு அவதூறு வழக்கு தொடரவிருப்பதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன.

PT WEB

'ஜி ஸ்கொயர்' நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளை, முதல்வரின் மருமகன் சபரீசனுடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்ட தனியார் வார இதழின்மீது, அவர் தரப்பிலிருந்து அவதூறு வழக்கு தொடரவிருப்பதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன.

G Square

பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்குச் சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடக மாநில பெங்களூர், மைசூர் மற்றும் பெல்லாரி தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டன. ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் சுதிர், பிரவின், பாலா, ஆதவ் அர்ஜூன், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகனின் மகன் கார்த்திக் உள்ளிட்டவர்களின் வீடுகள், அவற்றுடன் 19 நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டன.

இந்த ரெய்டு குறித்து ஜி ஸ்கொயர் தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் நிறுவனம் மீது, சில மாதங்களாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தேவையற்ற புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மையில்லை என்பதை நிரூபிக்க வேண்டியது, எங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், தற்போது நடந்து வரும் வருமான வரி சோதனை, எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்பதை நிரூபிக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. பங்குதாரர்கள், வாடிக்கையாளர்களிடம், இந்நிறுவனம் எப்போதும் வெளிப்படையாக நடந்துள்ளது. இதனால், எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை; எனவே எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. தற்போது நடந்து வரும் சோதனைக்கு, நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வரும் நிலையில், எங்கள் மீதான குற்றச்சாட்டுகள், ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Cover story

இந்நிலையில், இந்த ரெய்டில் முதல்வரின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமான 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் இந்த ரெய்டே, ஆப்பரேஷன் சாப்ஸ் என்கிற பெயரில் சபரீசனுக்கு வைக்கப்பட்ட குறிதான் என்றும் ஒரு வார இதழ் செய்தி வெளியிட்டது. ஆனால், ஜி ஸ்கொயருக்கும் சபரீசனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் தரப்பு மறுத்தது. வருமான வரித்துறை தரப்பிலும் அவருக்குத் தொடர்பிருப்பதாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், அந்த வார இதழின்மீது சபரீசன் தரப்பு அவதூறு வழக்கு தொடர்விருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.