தமிழ்நாடு

சென்னையில் கணக்கில் வராத 43 டன் அமோனியம் நைட்ரேட் ? வெளியாகும் அதிர்ச்சி தகவல்!!

சென்னையில் கணக்கில் வராத 43 டன் அமோனியம் நைட்ரேட் ? வெளியாகும் அதிர்ச்சி தகவல்!!

webteam

சென்னையில் இருந்த மொத்தம் அமோனியம் நைட்ரேட்டும் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 43 டன் அகற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் அனைத்தும் அகற்றப்பட்டதாக வெடிபொருள் துறையின் முதன்மை துணை கட்டுப்பாட்டாளர் சுந்தரேசன் தெரிவித்துள்ளார். 3 நாட்களில் 37 கண்டெய்னர்களில் அனைத்தும் எடுத்து செல்லப்பட்டதாக கூறும் நிலையில் 697 டன்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் வெடித்து 150 பேர் உயிரிழந்த நிலையில், சென்னையில் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை மணலியில் உள்ள சரக்கு பெட்டக முனையத்தில் 37 கண்டெய்னர்களில் 740 டன் அமோனியம் நைட்ரேட் இருப்பதாகவும், அவை விரைவில் அப்புறப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக கடந்த 9ஆஆம் தேதி 10 கண்டெய்னர்களில் 181 டன்னும், இரண்டாம் கட்டமாக நேற்று 12 கண்டெய்னர்களில் 229 டன்னும் பாதுகாப்பாக சாலை மார்க்கமாக எடுத்து செல்லப்பட்டன. 3ஆம் கட்டமாக இன்று 15 கண்டெய்னர்களில் மீதமுள்ளவை அகற்றப்பட்டன. செய்தியாளர்களிடம் பேசிய வெடிபொருள் துறையின் முதன்மை துணை கட்டுப்பாட்டாளர் சுந்தரேசன், 37 கண்டெய்னர்களில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் அனைத்தும் அகற்றப்பட்டன என்றார். எனவே பொது மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தார்.

ஆனால் 740 டன் இருப்பு எனப்பட்ட நிலையில், 3 நாட்களில் 697 மெ.டன் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படியென்றால் மீதம் உள்ள 43 டன் என்னவாயிற்று என்ற கேள்வி எழுந்துள்ளது.