பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக சோபியாவின் தந்தை சாமி தெரிவித்துள்ளார்.
நெல்லை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் சென்றார். அப்போது அவரது அருகில் தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற பெண் தனது பெற்றோருடன் சென்றுக் கொண்டிருந்தார். கனடாவில் ஆராய்ச்சி படிப்பை முடித்த இவர், தமிழிசை சவுந்தரராஜனுக்கு பின்புறம் அமர்ந்துகொண்டு பாரதிய ஜனதாவுக்கு எதிராக முழக்கமிட்டதாக தெரிகிறது. விமானத்தில் இருந்து இறங்கிய பின்னர் விமானநிலையத்திலும் பாரதிய ஜனதாவை விமர்சித்து முழக்கமிட்டதாக்ககூறி, அவர் மீது அங்கிருக்கும் காவல்நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். அப்பெண் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.இதன்பேரில் காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்பட 2 பிரிவுகளில் சோபியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை 15 நாள் காவலில் வைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது உடல்நலம் குன்றியதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோபியா அனுமதிக்கப்பட்டார்.
Read Also -> விமானத்தில் நடந்தது என்ன ? தமிழிசை விளக்கம்
Read Also -> சோபியா கைதும்.. தலைவர்கள் கண்டனங்களும்..
இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட10 பேர் தங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக சோபியா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த அவர், வயிற்று வலி காரணமாக சோபியா தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்தார். இதனிடையே சோபியாவை காவல்துறையினர் சித்ரவதை செய்ததாகவும், இது குறித்து மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றும் சோபியாவின் வழக்கறிஞர் அதிசயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.