சரபங்கா காவிரி உபரிநீர் திட்டம் Facebook
தமிழ்நாடு

மேட்டூர் காவிரி உபரிநீரேற்று திட்டத்திற்கு எதிர்ப்பு - அதிகாரிகளுடன் நில உரிமையாளர்கள் வாக்குவாதம்

மேட்டூர் சரபங்கா காவிரி உபரிநீரேற்று திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது அதிகப்படியான மழை நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படுவதால் அந்த நீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுத்து சேலம் மாவட்டத்தில் உள்பகுதியில் 100 வறண்ட வடிநில ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் விதமாக திப்பம்பட்டி நீர் தேக்க பகுதியில் பிரதான நீர் ஏற்று திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சரபங்கா காவிரி உபரிநீர் திட்டம்

ஏற்கனவே எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், நங்கவள்ளி ஏரியை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் நில உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்ததால் இதுவரை அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நில உரிமையாளர்களும் விவசாயிகளும் இயற்கை வழித்தடத்தில் நீர்வழிப் பாதையை கொண்டு செல்ல வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையிலும் வருவாய்த்துறையினர் கட்டாய நில எடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் அதற்கான தொகையை செலுத்தி நிலத்தை கையகப்படுத்தும் பணி இன்று மேட்டூர் அருகே விருதாசம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

இதனை அறிந்த மறைந்த மருத்துவர் நலச் சங்கத் தலைவர் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் நினைவு இல்லத்தை ஒட்டி இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை கண்டித்து அவரின் மனைவி அனுராதா மற்றும் உறவினர்கள்  நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், அடாவடியாக விருப்பமின்றி பட்டா நிலத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்தப் பணிகளை தடுக்கும் படியும் முதல்வருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். இருப்பினும், வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் நில உரிமையாளர்களை அப்புறப்படுத்தினார்கள்.

இதனை கண்டித்து அவர்களது உறவினர்களும் சம்பவ இடத்திற்கு வந்து பணியை தடுக்க முற்பட்டதால் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.