விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பட்டாசு ஆலைக்கு சீல் வைத்து சிறப்பு தனிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில், ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் பட்டாசு ஆலைகளில் நடைபெறக்கூடிய விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனிப்படை அமைத்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கடந்த 12ம் தேதி ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீநிதி பட்டாசு ஆலையில் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினரும், தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், பட்டாசு ஆலைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை கடைபிடிக்காததை கண்டு பிடித்த அதிகாரிகள் பட்டாசு ஆலையின் தற்காலிக உரிமத்தை ரத்து செய்து பட்டாசு ஆலைக்கு சீல் வைத்தனர். இந்நிலையில் சட்ட விரோதமாக இன்று பட்டாசு ஆலைக்கு வைத்த சீலை உடைத்து தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து சென்ற வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான குழுவினர் விதிமுறை மீறி செயல்பட்ட பட்டாசு ஆலையை பூட்டி சீல் வைத்தனர்.
இதையடுத்து இது சம்பந்தமாக சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலையின் போர்மேன் கிருஷ்ணசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆலையின் உரிமையாளர் ராமலட்சுமியை தேடி வருகின்றனர்.