சுற்றுப்புறச் சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்க கோரி இன்று முதல் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரி 2015ம் ஆண்டு அர்ஜுன் கோபால் உள்ளிட்ட மூன்று குழந்தைகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் கூடுதலாக புதிய மனுவை மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ளனர். அதை விசாரித்த நீதிமன்றம், பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக பட்டாசுக்கு தடைவிதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் வெளி மாநில பட்டாசு விற்பனையாளர்கள் ஆர்டர்களை நிறுத்திவிட்டதாக சிவாகாசியிலுள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர். அதனையடுத்து சிவாகாசியில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.