தமிழ்நாடு

திமுக வேட்பாளரின் கணவரை அறைந்த கட்சி நிர்வாகி - சிவகாசியில் பரபரப்பு

திமுக வேட்பாளரின் கணவரை அறைந்த கட்சி நிர்வாகி - சிவகாசியில் பரபரப்பு

webteam

சிவகாசி மாநகராட்சியில் திமுக பெண் வேட்பாளரின் கணவரை அக்கட்சியின் மற்றொரு நிர்வாகியே அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த 28-ம் தேதி முதல் பிப்ரவரி 4-ம் தேதி வரை வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. 5-ம்தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், 7-ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதனிடையே, விருதுநகர் மாவட்டத்தில் மறைமுக தேர்தல் மூலம் சிவகாசி மாநகராட்சிக்கான மேயர் மற்றும் துணை மேயர், 5 நகராட்சி, 9 பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் மார்ச் 4-ம் தேதி நடைபெறுகிறது. 48 வார்டுகளை கொண்ட புதிதாக அறிவிக்கப்பட்ட சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடக்கூடிய அதிமுக, திமுக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சுமார் 322 பேர் தங்களது வேட்பு மனுக்களை மாநகராட்சியில் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், வேட்புமனு பரிசீலனைக்கு அதிமுகவினர் அதிகமாக மாநகராட்சி அலுவலகத்தில் சென்றுள்ளதாகவும், எனவே தங்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரியும் திமுகவினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த திருத்தங்கள் நகர திமுக பொறுப்பாளர் உதயசூரியன், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 20-வது வார்டில் போட்டியிடும் திமுக பெண் வேட்பாளரின் கணவர் கருப்பசாமி என்பவரை அறைந்தார். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.