தமிழ்நாடு

சிவகாசி: ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக அரசுப் பள்ளி தலைமையாசிரியை மீது புகார்

சிவகாசி: ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக அரசுப் பள்ளி தலைமையாசிரியை மீது புகார்

webteam

அரசுப் பள்ளி தலைமையாசிரியை தீண்டாமை கொடுமை செய்வதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

சிவகாசி அருகே உள்ள பேராபட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பில் இரண்டு செக்சன்கள் உள்ள நிலையில் இதில் மொத்தம் 34 பேர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த பள்ளி சார்பாக சுற்றுச்சூழல் மன்ற வாரம் நடந்துள்ளது. இதில், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியரை மட்டுமே அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், பத்தாம் வகுப்பு மாணவர்களை அழைத்துச் செல்லவில்லை.

இதையடுத்து பள்ளி தலைமையாசிரியை ஜூலியட் ரதியை கண்டித்து பத்தாம் வகுப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் பள்ளியில் முழக்கமிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தலைமையாசிரியை அந்த மாணவர்களை பார்த்து நீங்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்றும் சாதி புத்தி என்றும் பேசியதோடு அதிலும் மாணவர் ஒருவருக்கு மாற்றுச் சான்றிதழும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பல மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தந்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. எனவே தலைமையாசிரியை ஜுலியட் ரதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், கல்வி அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு மீண்டும் அழைப்பதாகக் கூறி அழைப்பை துண்டித்தவர் அதன்பிறகு அழைக்கவில்லை,