அண்ணாமலை, சிங்கை ராமச்சந்திரன் pt web
தமிழ்நாடு

“அப்பா என் 11 வயசுலயே இறந்துட்டாரு.. வருத்தமா இருக்கு” - அண்ணாமலைக்கு சிங்கை ராமச்சந்திரன் பதில்!

சிங்கை ராமச்சந்திரன் தனது அப்பாவின் எம் எல் ஏ கோட்டாவில் கல்லூரியில் சீட் வாங்கியதாக அண்ணாமலை கூறிய நிலையில், சிங்கை ராமச்சந்திரன் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

Angeshwar G

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் பரப்புரைகள் களைகட்டி வருகின்றன. அதேசமயத்தில் தலைவர்களிடையே வார்த்தைப் போர்களும் நடக்கின்றன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், கல்லூரியில் படித்தது குறித்து தெரிவித்த கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “சிங்கை ராமச்சந்திரன் அப்பா எம்.எல்.ஏ. 2002 ஆம் ஆண்டு, எம்.எல்.ஏ கோட்டாவைப் பயன்படுத்தி அவருக்கு கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால் நான் 2002 ஆம் ஆண்டு முதன்முதலாக கோயம்புத்தூருக்கு வரும்போது, எனக்கு 17 வயது. இரண்டு தகர பெட்டிகளோடு பீலமேட்டில் போய் இறங்கிறேன். பிஎஸ்ஜி கல்லூரி முன்பு நின்றுகொண்டு நான் என் அப்பாவிடம், இந்த ஊர் நமக்கு செட் ஆகுமா என கேட்டேன். ஏனெனில் பிஎஸ்ஜி கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. எம்.எல்.ஏ கோட்டாவில் அப்பாவின் பெயரை வைத்து நான் படிக்க வரவில்லை. தனியாக வந்து பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படித்துள்ளேன். எனவே கோட்டா சிஸ்டத்தில் வானதி வரவில்லை” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோவை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கரூரை சேர்ந்த, இந்த ஊரை சேராத நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை, மறைந்த எனது தந்தை சிங்கை கோவிந்தராஜ் கோட்டாவில், எனக்கு சீட் வாங்கிக் கொடுத்ததாக, தவறாக, மன வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய தகவலை சொல்லியுள்ளார். எனது தந்தை இறக்கும்போது எனக்கு வயது 11. நான் பொறியியல் படிக்கும்போது எனக்கு 18 வயது. நான் டிப்ளமோ படித்து சிறந்த மாணவர் என்ற விருதை பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் வாங்கி, அதன்பின்பே பொறியியல் படித்தேன்.

அவர் சொல்வதுபோலவே, அவருக்காவது அந்த தகர டப்பாவை பிடிக்க அப்பா இருந்தார். எனக்கு என் அப்பாவே இல்லை. நான் தனி ஆளாக கல்லூரிக்கு வந்தேன். 76 ஏக்கரில் பண்ணையார் மாதிரி நிலம் வைத்திருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். ஆனால் தகர டப்பா கொண்டுவந்தேன் என சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்கிறமாதிரி இல்லை.

எனது அப்பா முன்னாள் எம்.எல்.ஏ சிங்கை கோவிந்தராஜ், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது எப்படியெல்லாம் செயல்பட்டார் என்பதை கோவை மாவட்ட மக்கள் அனைவருக்கும் தெரியும். அவர் இறந்தபோது மருத்துவமனையில் இருந்து உடலை எடுத்துவரக்கூட பணம் இல்லாமல், கடன் வாங்கிக் கொடுத்துதான் எடுத்து வந்தோம்.

பின் அவரது அம்பாசிடர் காரை விற்றுதான், கடனை எல்லாம் அடைத்தோம். என் அம்மாவிற்கு அப்போது 33 வயது. தனிப்பெண்ணாக இருந்து என்னையும், எனது 3 வயது தங்கையையும் வளர்த்தார். நான் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு காரணமே என் அம்மாதான். அம்மா எனக்கு படிப்பை கொடுத்தார். நரேந்திர மோடியின் குஜராத்தில், ஐஐஎம் அஹமதாபாத்தில் படித்து மாணவர் மன்ற தலைவராக எல்லாம் இருந்தவன்.

என் அப்பா சிங்காநல்லூர் மக்களுக்கு அத்தனை நல்லது செய்து கொடுத்துள்ளார். இவர் இப்படி பேசியதால் அதிமுக கட்சித் தொண்டர்களும், எங்கள் சொந்தக்காரர்கள் என எல்லோரும் மிக மனவருத்தத்தில் இருக்கிறோம். இறந்துபோன ஒருவரைக் குறித்து, அதுவும் பொய்யான தகவலைக் கூறியதில் எல்லோரும் மன வருத்தத்தில் இருக்கிறோம். இதற்கு அண்ணாமலை கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்தார்.