தமிழ்நாடு

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: குற்றவாளியை கைது செய்யக்கோரி போராட்டம்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: குற்றவாளியை கைது செய்யக்கோரி போராட்டம்

Rasus

தேனி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மனநலம் பாதிக்கப்பட்ட இச்சிறுமி அருகேயுள்ள மனநல காப்பகத்தில் பயற்சி பெற்று வருகிறார். இதற்காக தினந்தோறும் வீட்டில் இருந்து ஆட்டோ மூலம் சிறுமி அங்கு சென்று வருவார். இதற்கு உதவியாக மனநல காப்பகத்தில் வேலை செய்யும் பணியாளர் பெண் ஒருவரும் இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி காப்பகத்தில் இருந்து வீடு திரும்பிய சிறுமிக்கு, தாயார் உடை மாற்றியுள்ளார். அப்போது சிறுமியின் உடலில் நிறைய இடங்களில் நகக்கீறல்கள் மற்றும் ரத்தம் இருப்பதை கண்டு தாயார் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து தேனி அனைத்து மகளிர் காவல் நிலையில் சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்துவிட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக சிறுமியை சேர்த்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே விசாரணை என்ற பெயரில் சிறுமியை காவல்நிலையத்தில் பல மணி நேரமாக ஆய்வாளர் மங்கையர் திலகம் காக்க வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றாவளியை கைது செய்யக்கோரியும், ஆய்வாளர் மங்கையர் திலகத்தின் செயலை கண்டித்தும், பாதுகாப்பற்ற முறையில் மனநலம் காப்பகம் நடத்திய சரவணன் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதித் தமிழர் பேரவை, கம்யூனிஸ்ட், தமிழ் புலிகள் உள்ளிட்ட கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளி கைது செய்யப்படுவார் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.