மதுரையில் பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், முன்னாள் தலைமையாசிரியருக்கு 55 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றியவர் ஆரோக்கியசாமி. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் பயின்ற சுமார் 90 மாணவியருக்கு, 2 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல்கள் தந்ததாக ஆரோக்கியசாமி மீது பெற்றோரும், மகளிர் அமைப்பினரும் புகார் கூறியிருந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் குற்றம் செய்ததாக ஆரோக்கியசாமி மீதும், குற்றச்சாட்டை மறைத்ததாக வகுப்பு ஆசிரியர்கள் மூவர் மீதும் வழக்கு தொடர்ந்தனர். மதுரை மாவட்ட தீண்டாமை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில், 24 மாணவியர் சாட்சியம் அளித்தனர்.
இதையடுத்து ஆரோக்கியசாமிக்கு, பல்வேறு பிரிவுகளில் 55 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அவருடன் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்புக்குப் பிறகு சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஆரோக்கியசாமி மீது, சிலர் முட்டைகளையும், காலணிகளையும் வீசினர். இதனால் அவரை போலீஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.