தமிழ்நாடு

ஓமலூர்: ஏழு தலைமுறையினர் ஒன்று கூடி கொண்டாடிய சந்திப்பு திருவிழா

ஓமலூர்: ஏழு தலைமுறையினர் ஒன்று கூடி கொண்டாடிய சந்திப்பு திருவிழா

kaleelrahman

ஓமலூரில் ஏழு தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களின் சந்திப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் ஏழு தலைமுறை குடும்பங்களின் இணைப்பு மற்றும் சந்திப்பு திருவிழா நடைபெற்றது. ஓமலூரைச் சேர்ந்த உறவுகள், நண்பர்கள் திருமணம், வேலை, இடமாற்றம் என தமிழகம் முழுவதும் பிரிந்து சென்று வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பணி நிமித்தம் குடும்பம் என அங்கங்கே குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அதனால், கடந்த ஒருசில தலைமுறைகளாக குடும்ப உறவுகளின் மாண்பு, சந்திப்பு இல்லாமல் போனது. மேலும், நமது பாரம்பரியம், கலாசாரம் ஆகியவையும் மறைந்துகொண்டே போகிறது.

இந்தநிலையில், வளரும் தலைமுறைக்கு நமது கலாசாரம், பண்பாடு, குடும்ப உறவுகள், நட்புக்கள், சொந்த பந்தங்கள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைகள் குறித்த தகவல்களை தெரியப்படுத்தும் வகையில் ஏழு தலைமுறை சங்கமிக்கும் குடும்ப இணைப்பு மற்றும் சந்திப்பு விழா நடத்தப்பட்டது. இதில், ஓமலூரைச் சேர்ந்த செல்வராஜ், வருதராஜன், லிபியா சந்திரசேகர், துரைராஜி ஆகியோர் இணைந்து இந்த விழாவை நடத்தினர்.

இந்த விழாவில் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த பாட்டன், பாட்டிகள் முதல் தற்போதைய தலைமுறை குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டு தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். மேலும், தற்போதைய தலைமுறையினர், நமது தமிழ் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, குடும்ப உறவுகளின் மாண்பு, நட்புக்களின் உரிமை, கூட்டு குடும்பத்தால் இளைய தலைமுறை கற்றுகொள்ளும் வாழ்வியல் நடைமுறைகள் குறித்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், எவ்வளவு தூரத்தில் வாழ்ந்தாலும், குடும்ப உறவுகளை ஆண்டுக்கு ஒரு முறையாவது சந்தித்து அனைவரும் அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று அனைவரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். மேலும், அனைத்து குடும்பங்களின் பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் ஒன்றாக பேசி, விளையாடி உறவை புதுப்பித்துக் கொண்டனர். இதையடுத்து அனைவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.