முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு pt desk
தமிழ்நாடு

போதைப் பொருள் கடத்தல்: “சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுத்தாரா முதல்வர்?” - செல்லூர் ராஜூ கேள்வி

“சூரசம்ஹாரத்தில் கம்சனை வதம் செய்து மக்களை முருக கடவுள் காப்பது போல, எடப்பாடி பழனிசாமி மக்களை காக்க போராட்டங்களை நடத்தி வருகிறார்” என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.

webteam

செய்தியாளர்: பிரசன்ன வெங்கடேஷ்

தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி மதுரையில் இன்று அதிமுகவினர் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மதுரை பெரியார் பேருந்து நிலைய சந்திப்பில் இருந்து நேதாஜி சாலை, மேலமாசி வீதி சந்திப்பு, பாலமுருகன் கோவில் வழியாக ஜான்சி ராணி பூங்கா வரை நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மனித சங்கிலி போரட்டத்தில் ஈடுபட்டனர்.

ADMK Protest

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறுகையில்...

‘தமிழக காவல்துறை கண்டுபிடிக்கவில்லை’

"ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் போதைப் பொருட்கள் தற்போது தமிழ்நாட்டில் புழக்கத்திற்கு வந்துள்ளது. போதைப் பொருள் கடத்தலில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நிலவும் போதைப் பொருள் கடத்தலை தமிழக காவல்துறை கண்டுபிடிக்கவில்லை, அமெரிக்க உளவுத்துறை கூறியதன் அடிப்படையில் கடத்தல் தற்போது தெரிய வந்துள்ளது.

‘சர்வாதிகாரியாக மாறினாரா முதல்வர்?’

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என கூறினார், முதலமைச்சர் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுத்தாரா? இல்லையே...! இப்போதும் போதைப் பொருள் கடத்தல் தொடர்கிறதுதானே.

திமுக கட்சி இனியும் ஆட்சியில் தொடர்ந்தால் விலைவாசி ஏற்றம், பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள், திருட்டு கடத்தல் உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும். தமிழகத்தில் அனைத்துவிதமான சட்ட விரோதமான நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்.

sellur raju

‘ஜாபர் சாதிக்...’

ஜாபர் சாதிக் மீது 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜாபர் சாதிக் மீண்டும் போதைப் பொருள் கடத்தலை தொடங்கியுள்ளார்.

ஜாபர் சாதிக் முதலமைச்சர் குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளதால் காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய காவல்துறையை வைத்துதான் அதிமுக ஆட்சி காலத்தில் ஜாபர் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

‘கம்சனை வதம் செய்த முருகனை போல...’

சூரசம்ஹாரத்தில் கம்சனை வதம் செய்து மக்களை முருக கடவுள் காப்பது போல எடப்பாடி பழனிசாமி மக்களை காக்க போராட்டங்களை நடத்தி வருகிறார்" என்றார்.