தமிழ்நாடு

மரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்? - போலீசார் விசாரணை

மரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்? - போலீசார் விசாரணை

webteam

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தை வெட்ட ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கூடலூர் அருகே கையுன்னி அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் முருகேசன். இவர், 6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலி‌யல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆனால், இது பொய்யான குற்றச்சாட்டு என அவரின் மனைவி தமிழரசி மறுத்துள்ளார். பள்ளி வளாகத்தில் மரங்களை வெட்டுவதற்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிப்பதற்கும் முருகேசன் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் அ‌வருக்கும் மற்ற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே பிரச்னை நிலவி வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் உள்ள 50 ஆண்டுகால மரம் வெட்டப்‌பட்டது. இதற்கு முருகேசன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் இதனை பயன்படுத்திக் கொண்டு அவர் மீது பொய்யாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

இவருக்கு ஆதரவு தெரிவித்து கிராமமக்கள் கையுன்னி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களின் குற்றச்சாட்டை ஏற்று பள்ளி வளாகத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்ததில், பள்ளி நிர்வாகம் அனுமதி இல்லாமல் மரம் வெட்டியது தெரியவந்தது. 

இதனால், ஆசிரியர் கைது வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்த காவல்துறையினர், மரம் வெட்டப்பட்டது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.