தமிழ்நாடு

சாத்தூர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை

சாத்தூர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை

webteam

கர்ப்பிணி பெண்ணிற்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என முதல் கட்ட மருத்துவ சோதனையில் முடிவு வெளியாகியுள்ளது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாடு செல்வதற்காக உடல் பரிசோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் 2 வாரங்களுக்கு முன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் ரத்த தானம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவரது ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்ற பட்டியலை எடுத்து பார்த்தபோது, சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது அவர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்றுடன் கூடிய ரத்தம் செலுத்தப்பட்டு, அவருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்படாமல் இருக்க தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த ஜனவரி 17ம் தேதி சாத்தூர் பெண்ணுக்கு , பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஹெச்.ஐ.வி உள்ளதா இல்லையா என்பது குறித்து கடந்த மார்ச் 4ம் தேதி PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு செங்கல்பட்டில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் ரத்த சோதனையின் முடிவில் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும் தாயும் சேயும் நலமுடன் உள்ளதால் இன்னும் இரண்டு, மூன்று தினங்களில் அவர்களை  வீட்டிற்கு அனுப்ப உள்ளதாகவும், 6 மாதம் மற்றும் 18 மாதங்களில் இன்னும் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.