அண்ணல் அம்பேத்கர் 133 வது பிறந்த நாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் வி.கே.சசிகலா அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மக்களுக்காக எந்த திட்டத்தையும் அவர்கள் செயல்படுத்தவில்லை. மக்களுக்காக வந்த அரசு போல திமுக அரசு செயல்படவில்லை. 5 ஆண்டுகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என செயல்படுகிறார்கள்.
ஆளுநருடன் மோதல் போக்கை கைவிட்டு விட்டு, மக்களுக்காக நல்லதை செய்யும் பணியில் திமுக அரசு ஈடுபட வேண்டும். கோடநாடு விவகாரத்தை தேர்தலுக்கு தேர்தல் திமுக பயன்படுத்துகிறது. அதேநேரம் அவ்விவகாரத்தில் விசாரணை மட்டுமே நடைபெறுகிறது, நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இதேபோல இன்றைய எதிர்க்கட்சியும், மக்கள் பிரச்னைகளை எடுத்துச் சொல்ல தவறிவிட்டது. சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அதிமுக செயற்குழு கூட்டம் நடத்தினாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.
சட்டமன்றத்தில் இருக்கைக்காக அதிமுக சண்டையிடுவது சரியான முறை அல்ல. உட்கட்சி பிரச்னையால் அதிமுக எதிர்க்கட்சியாகவும் செயல்படவில்லை” என்றார்.
“திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மாநாட்டிற்கு அழைத்தால் செல்வீர்களா?” - பத்திரிகையாளர்கள்
“அழைக்கட்டும் பின்னர் சொல்கிறேன்” - சசிகலா
பின்னர் பேசுகையில், “ஜெயலலிதா இறந்த காலகட்டத்தில் இருந்த சட்டசபை போல் தற்போது இல்லை. தியேட்டருக்கு செல்வது போல் சட்டசபைக்கு தற்போது சென்று வருகிறார்கள். நான் அனைவருக்கும் பொதுவான நபர். எனக்கு என இது சொந்த ஊர் - அது சொந்த ஊர் என கூறியது முறையல்ல. சாதியிலும் நான் இந்த சாதி என நினைத்தது இல்லை. அப்படி நினைத்திருந்தால் ஒரு கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த நபரை முதல்வராக முன்னிறுத்தி இருக்க மாட்டேன்.
என்னுடைய வழி தனி வழியாகத்தான் இருக்கும்- சசிகலா
என்னை பொறுத்தவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொண்டர்கள் என்று தான் பார்ப்பேன். ஏழைக்கும் சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பு வழங்கி அவரை அமைச்சராக ஜெயலலிதா உருவாக்கி உள்ளார்” என தெரிவித்தார்.