மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சசிகலாவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்த நிலையில், அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணைத்தில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவருடன் இருந்தவர்கள், உறவினர்கள், சிகிச்சை பார்த்த மருத்துவர்கள் என அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது வருகிறது. இந்நிலையில், மரணம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் அவரது மகள் பிரீத்தா ரெட்டிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சசிகலா பதிலளிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ள விசாரணை ஆணையம், சம்மனை பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தபாலில் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் 75 நாட்களாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஏற்கனவே தமிழக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், ராம மோகன் ராவ் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில், தற்போது சசிகலா மற்றும் பிரதாப் ரெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.