தமிழ்நாடு

சர்க்கார் கதை விவகாரம்: தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்க்கார் கதை விவகாரம்: தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

rajakannan

சர்க்கார் படத்துக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தயாரிப்பாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ‘சர்கார்’ படத்தில் விஜய் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய் அரசியல்வாதியாக மாறும் தொழிலதிபராக நடித்துள்ளார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சர்க்கார் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது. 

இதனிடையே, சர்கார் படத்தின் கதை மற்றும் திரைக்கதை தன்னுடையது என்று வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘செங்கோல் என்ற தலைப்பில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்த தனது கதையை திருடி, சர்கார் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியுள்ளார்’ என்ற வருண் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தீபாவளிக்கு படம் வெளியாகவுள்ளதால், அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில், சர்க்கார் கதை தொடர்பான வழக்கு இன்று நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் குறித்து அக்டோபர் 30க்குள் பதிலளிக்க பட தயாரிப்பாளர், தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு முடியும் வரை படத்தை வெளியிட தடை கேட்டபோது, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதி எம்.சுந்தர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ், விஜயை வைத்து இயக்கிய "கத்தி" படத்தின் கதை தன்னுடையது என்று "அறம்" படத்தின் இயக்குநர் கோபி நயினார் குற்றஞ்சாட்டியிருந்தார்.