தமிழ்நாடு

பரமத்தி வேலூரில் மூட்டை மூட்டையாக மணல் கொள்ளை

பரமத்தி வேலூரில் மூட்டை மூட்டையாக மணல் கொள்ளை

webteam

பரமத்தி வேலூரை அடுத்துள்ள பொன்மலர்பாளையம், கொந்தளம், எஸ்.கே.மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரியாற்றிலிருந்து மூட்டைகளில் மணலை கட்டி இருசக்கர வாகனங்கள் மூலம் கடத்துவதாக கனிமவளத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நாமக்கல் கனிமவளத்துறை கூடுதல் இயக்குனர் உள்ளிட்ட வருவாய்துறையினர் மற்றும் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.


 
பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காவிரியாற்றிலிருந்து மணல் கடத்தல் நடைபெறுவது தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை, காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் மணல் கடத்தலை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மணல் மூட்டைகள் பதுக்கப்பட்டு, சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக நாமக்கல் கனிமவளத்துறை கூடுதல் இயக்குனர் ஜெயந்திக்கு புகார் வந்தது. இந்தப் புகாரையடுத்து, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் உதவியுடன், இன்று அதிகாலை கொந்தளம், எஸ்.கே.மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கனிமவளத்துறையினர் இணைந்த குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

இதில் தனியார் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தார். போலீசார் மற்றும் அதிகாரிகளை பார்த்தவுடன் இருசக்கர வாகனங்களில் மணல் மூட்டைகளை ஏற்றி வந்த 10க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மணல் மூட்டைகளை கீழே போட்டு விட்டு தப்பியோடியுள்ளனர். மேலும் அப்பகுதியில் சட்டவிரோதமாக மின் திருட்டும் நடந்துள்ளது. அது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமவளத்துறை கூடுதல் இயக்குநர் ஜெயந்தி தெரிவித்தார்.