சேலத்தில் ஆள்கடத்தல், வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் துரத்தி பிடிக்க முயன்றபோது பள்ளத்தில் விழுந்து இரண்டு பேருக்கு கால்முறிவு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவரை கடத்திய கொள்ளை கும்பல், அவரிடமிருந்து ரூ. 41 ஆயிரம் பணம், தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாக அவர் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோன்று கடந்த 7ஆம் தேதி சொகுசு காரில் வந்த ஐந்து பேர் தனபால் என்பவரை வழிமறித்து ரூ. 2000 பணம் மற்றும் செல்போன், கைக்கடிகாரம் ஆகியவற்றை பறித்துச் சென்றதாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார்கள் மீது விசாரணையை தொடங்கிய சூரமங்கலம் போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மாநகர காவல் உதவி ஆணையாளர் நாகராஜன் தலைமையில் இரும்பாலை பிரதான சாலையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை மறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். மேலும் காரில் 2 கத்திகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காரில் வந்த சித்தேஸ்வரன் மற்றும் அரவிந்த் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து காவல் துறையினர் அவர்களை துரத்திச் சென்றபோது இரண்டு பேரும் எதிர்பாராதவிதமாக பெரிய பள்ளத்தில் தவறி விழுந்ததில் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால் முறிவு ஏற்பட்ட 2 பேரையும் மீட்ட காவல் துறையினர் சிகிச்சைக்காக இருவரையும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவங்களில் தொடர்புடைய இலியாஸ், அஜித், தீபன் ஆகிய 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.