சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த ராணுவ வீரர் தனது குடும்பத்தை காப்பாற்றும்படி கண்ணீர் மல்க பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து விசாரித்த போது காவல்துறையினர் அளித்த தகவலின் படி, “ராணுவ வீரர் மாதேஷ், சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியையடுத்த கொளத்தூர் அருகே கத்திரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பீகார் மாநிலத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேவதி (வயது 36). மாதேஷின் தாயார் மாதி. இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் விலைக்கு வாங்கியுள்ளனர்.
இவர்களின் நிலத்திற்கு அருகே உள்ள கோவிந்தராஜ் என்பவர், தனது காட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக மின்வழிப்பாதையை 11 நபர்களுக்கு பாத்தியப்பட்ட பொது வழி தடத்தில் போட்டுள்ளார். இதற்கான பணிகள், கடந்த 23 ஆம் தேதி மின்வாரிய ஊழியர்களால் மின்கம்பம் நடும் பணி நடைபெற்றது.
பொது வழித்தடத்தில் மின்கம்பம் நடுவதை ராணுவ வீரர் மாதேஷ் மற்றும் அவரது மனைவி மற்றும் தாயார் அமைக்க கூடாது என எதிர்த்துள்ளனர். அப்பொழுது கோவிந்தராஜ் தாயார் குழந்தை அம்மாள் - மாதேஷின் மனைவி மற்றும் தாயார் ஆகியோர் கிடையே கைகலப்பு ஏற்படுகிறது, இதனால் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுகுறித்து இருதரப்பிலும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இரண்டு தரப்பிலும் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து கொளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விரைந்து விசாரணை மேற்கொள்ளவே ராணுவ வீரரின் குடும்பம் கோரிக்கை விடுத்துள்ளது.