வருமான வரித்துறையினர் போதிய விவரங்களை சேகரித்த பின்னரே சோதனைகளில் ஈடுபடுவதாக பொருளாதார விவகாரங்கள் துறையின் முன்னாள் செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகளை தொடர்ந்து ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் ஜெயலலிதாவின் வீட்டில் நடத்தப்பட்ட இந்த சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தது.
இந்நிலையில் டெல்லியில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த சக்திகாந்த தாஸ், பணமதிப்புநீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக வருமானவரித்துறை நாடு முழுவதும் சோதனைகளை நடத்திவருவதாக தெரிவித்தார். அத்துடன் சோதனை நடத்துவதற்கான தகவல்களை திரட்டிய பிறகே வருமானவரித்துறை சோதனையில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார். மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு சந்தேகத்திற்குரிய கணக்குகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதிக பணம் டெபாசிட் செய்தவர்களிடம் சோதனை நடைபெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.