தமிழ்நாடு

பக்தர்கள் குடிக்க ஒருசொட்டு குடிநீர் இல்லை - கணக்கில் 25 லட்சம் அம்பேல்

பக்தர்கள் குடிக்க ஒருசொட்டு குடிநீர் இல்லை - கணக்கில் 25 லட்சம் அம்பேல்

webteam

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலையில் குடிநீருக்காக 25 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது சதுரகிரி மலை. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள இந்த மலையில் சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. சுந்தரமகாலிங்கம் கோயிலில் அனைத்து அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதனால் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் 8 நாட்கள் வரை மலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு செல்லும் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் உள்ளது.

இந்நிலையில் சுந்தரமகாலிங்கம் கோயிலில் குடிநீருக்காக 25 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வனத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சில கேள்விகளை எழுப்பி இருந்தார். 

குறிப்பாக நுழைவு வாயிலில் பக்தர்களிடம் 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை என்று வனத்துறை பதில் அளித்துள்ளது. மேலும் குடிநீர் வசதி குறித்த கேள்விக்கு, குடிநீருக்காக 25 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு சதுரகிரியில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாத நிலையே உள்ளதாக பக்தர்கள் கூறுகிறார்கள். இதனால் அரசு இதற்கு உரிய நடவடிக்கை வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.